Monday, March 9, 2015

கோயில் புனரமைப்பு முறை

கோயில் புனரமைப்பு முறை
தெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல தெய்வ வழிபாடு. ஒரு கோயில் என்றால் அதில் ஸ்தலம், தீர்த்தம், விருட்சம் என்ற மூன்று முக்கிய அங்கங்கள் சொல்லப்படுகின்றன.
ஸ்தலம்: கோயில் கருவறை-மூலவர் அமைவிடத்தை ஸ்தலம் என்று சொல்வார்கள்.இந்த இடத்தை தீர்மானிப்பது மிக மிக நுட்பமான விஷயம். பஞ்சபூதங்களின் சக்தி, தெய்வசக்தி, வானியல் கதிர்வீச்சு போன்றவை
மிகும் இடத்தில்-புள்ளியில் தான் கருவறை அமையப்பெறும். கருவறை அமைவிடத்தை சித்தர்கள், ஞானிகள்-தவசிரேஷ்டர்கள், சுயம்பு மூர்த்திகள் போன்றவை தீர்மானிக்கின்றன. கற்புநெறி பிறழா பெண்கள் மற்றும் தன்னலமற்று மிக உயர்ந்த நோக்கில் உயிர்தியாகம் செய்தோரின் ஆன்மா பிரிந்த இடத்தில் ஆன்ம சக்தி நிறைந்திருக்கும். அவையும் கருவறையாக அமையும். முக்கியமாக நாட்டுப்பசுக்கள் கோயில் கருவறையை தீர்மானிக்கும் சக்தி படைத்தது. ஆலயம் என்று சொல்வதே “ஆ+லயம்” அதாவது பசு தன்னை மறந்து லயித்து நின்ற இடம் என்ற பொருளில் தான். நாட்டுப்பசுவுக்கு இங்கே ஏன் முக்கியத்துவம் என்றால், பசுவும் கோயிலும் வெவ்வேறு அல்ல என்பதே. பசுவின் வீடே கோ+யில். பசுவின் திமில்தான் கோ+புரம் என்பது. இந்த திமில் மூலம் நாட்டுப்பசு தனது சூரிய கேது நாடியைக் கொண்டு காஸ்மிக் சக்தியை கிரகிப்பது போலவே கோபுரங்களும் காஸ்மிக் சக்தியை தனது செம்பு கலசங்கள் வாயிலாக இழுத்து உள்ளே தருகின்றன. தர்ப்பை, வரகு போன்ற அதிக மின்னோட்டத்தை தடுக்கும் வஸ்துக்களும் சேர்க்கப்படுகின்றன. ஆதிநாளில் பல கோயில்கள் இன்றைய கிராம கோயில்கள் போல கல்கட்டு கோயில்களாக இருந்தன. அவையெல்லாம் பசுக்கள் கட்டிய இடங்களே. ஒரு கிராம நிர்மானத்தின்போது பசுக்கள் தங்கிய இடங்களே கோயில்களாக உருப்பெற்றன. எனவே கருவறை என்பது மிக மிக முக்கியமான ஒன்று. இங்கே திசை என்பது எட்டு திக்கு அல்ல, பத்து திக்குகள்; அதாவது, எட்டு திக்குகள் மற்றும் மேல் கீழ் என்பவையும் சேரும் (கந்தகுரு கவசத்தில் வரும் வரிகளை கவனிக்க, “பத்து திக்கு தோறும எனை பறந்து வந்து ரட்சிப்பாய்”).எனவே, கோயில் கருவறையில் சிலையை நகர்த்தினால் மட்டுமல்ல, உயர்த்தினாலோ, தாழ்த்தினாலோ கூட ஸ்தான பேதம் தான்.
கருவறையை சுற்றி கோயில் எழுப்பும்போது எண்ணற்ற விஷயங்கள் கவனிக்கப்படும். கோயில் கட்டும் அரசன்/குலமுதல்வன் உடல் உயர அகலத்தை விகிதாசாரமாக எடுப்பதும் கூட உண்டு. எனவே கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு பாகத்தையும் அளவையும் குறிக்கும். அவற்றின் அளவுகள் கோயில் மற்றும் தெய்வ சக்தியை பெருக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
இப்படி கோயில் அளவீடுகள் தீர்மானிக்கப்பட்டு பின்னர் கோயில் கட்டுமானத்திற்கு பல்வேறு அளவீடுகள் கணக்கிடப்படுகின்றன. அவை குறியீடுகளாக செதுக்கப்படுகின்றன. திசைகள், அளவுகள், காலம் என்று அனைத்தும் அடக்கம்.
இதை திருக்குறியீடு எனப்படுகிறது. கட்டுமானத்தின் தொடக்கப்பணியான சங்கு ஸ்தாபனம்தான் இது. வட்டவடிவம் காலத்ததையும், சதுரவடிவம் இடத்தையும் அதன் குறுக்கு கோடுகள் துள்ளியமான திசைகளையும், செவ்வகம் இயங்கு சக்திகளையும் குறிக்கிறது. அதோடு பிளான் போன்ற கட்டங்கள் பிந்து(பரம்) என்ற புள்ளியிலிருந்து முதல் கட்டம்,இரண்டாவது கட்டம்,மூன்றாவது கட்டம் என விரிகிறது. முதல் கட்டம் பரவெளி இறை உறையும் பகுதியாகவும் முதல் கட்டத்திற்கும் 2வது கட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதி தெய்வ வெளி 3வது திருசுற்று பரத்தின் விபவம் ஜீவராசிகளுக்கு,பரத்வம்,வியூகம்,விபவம் என்பதான திட்டத்தின் குறியீடு.இது அடிக்கப்பட்ட கல் இந்த சேத்திரத்தில் நிர்மானிக்கப்பட்ட முதல் கல்லாகக் கருதலாம். (நன்றி:ராஜாராம்)
இங்கே முக்கியமான இன்னொரு விஷயம், கடைபிடிக்கப்படும் ஆகமம். சிவனின் முகங்களைப் பொறுத்து ஈசானம், தத்புருஷம், வாமதேவம் என்று ஆகமங்களை குறிப்பிடுவர். கொங்கதேசத்திற்கு சத்யோஜாத ஆகமமே பின்பற்றப்பட்டது. ஆனால் இன்றைய அரைவேக்காட்டு ஸ்தபதிகள் திருடர்கள் மற்றும் பணத்திமிர் கொண்ட அகந்தைக்கார தர்மகர்த்தாக்களின் ஆட்டுவித்தளுக்கு ஆட்பட்டு ஆகமங்களை மீறுகின்றனர். அதோடு ஒவ்வொரு கோயிலுக்கும் சிற்சில ஆகம வேறுபாடுகள் இருந்துகொண்டே இருக்கும். அவற்றை அறிந்து பின்பற்ற அந்த கோயிலை கட்டிய குடும்பத்தை சேர்ந்தவர்களே சிறந்தவர்கள். அப்படியில்லையேல், சிற்சில நுணுக்கங்களையும் திறம்பட ஆய்ந்து செய்யக்கூடியவர்கள் சொல்வதை கேட்டு, குலகுருவின் வழிகாட்டலோடு நடத்தப்பட வேண்டும்.
குலகுரு தலைமை-கருமாபுரம் பொன்காளியம்மன் கோயில்
குலகுரு தலைமை - காடையூர் காடீஸ்வரர் கோயில்
குலகுரு தலைமை - இடைப்பாடி நல்லாத்தாள் கோயில் 
குலகுரு தலைமை-கவுண்டச்சியம்மன் கோயில்
குலகுரு தலைமை -அக்கரைப்பட்டி முத்துசாமி கோயில்
மேலும் தெய்வ விக்ரகத்தின் கல் வகையைப் பொறுத்தே கருவறை கல்லின் வகை தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இன்று கோயில் கருவறைக்குள் கழிவறையில் ஒட்டப்படும் டைல்ஸ், கிரானைட் போன்றவை ஒட்டப்படுகின்றன. கோயில் முழுதும் கிரானைட் பளீரிடுகிறது. கோயில்களுக்கென்று பல ஊர்களை மானியமாக விட்ட நம் முன்னோர்களுக்கு கோயில் தளங்களை பாலிஷ் போட்டு வைக்கத் தெரியாதா? ஏன் செய்யவில்லை என்று சிந்திக்கவேண்டும். அப்படி பாலீஸ் போடுதல் மிகத்தவறானதாகும். தற்போது அறங்கெட்ட அறநிலையத்துறை தன்னார்வலர்கள் அழுத்தத்தால் டைல்ஸ் பதிப்பதை தடை செய்துள்ளது. (யாரோ அறநிலையதுறையை போற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த துறையின் பிடியில் கோயில்கள் சீரழிவது போல துலுக்கர்கள் படையெடுப்பில் கூட நமது கோயில்கள் சீரழியவில்லை. விளக்கமாக அறிய இங்கே கிளிக்கவும்.)
தெய்வம் என்பது மூலவர் விக்ரகத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு தூணிலும் உண்டு. கோயில் கட்டும்போது பல இடங்களிலும் யந்திரங்கள், சக்கரங்கள் பிரதிஷ்டை செய்யப்படும். இவை கோயிலுக்கு மிகுந்த சக்தியை கொடுக்கும். அதோடு கோபுரம் வழியாக ஈர்க்கப்படும் வானியல் காஸ்மிக் சக்தி விக்ரகத்தின்மீது பாய்ந்து ஆலயம் முழுக்க பரவி நிற்கும், அதில் தூண்களும் பல ஆண்டுகளாக சக்திபெற்று நிற்கும். முறையாக புனர் நிர்மாணம் செய்பவர்கள் இவற்றை கருத்தில் கொண்டு யந்திரங்களையும் சக்கரங்களையும் முறையாக பிரதிஷ்டை செய்வார்கள். முறையற்றவர்கள் அவற்றை திருடிவிடுவார்கள். இதை நாம் மட்டும் சொல்லவில்லை, புகழ்பெற்ற கொங்கதேச தூரன் கூட்ட கோயிலில் பொன்காளியம்மனே சொன்ன வாக்காகும். அதனாலேயே அந்த கோயிலில் சுமார் நாற்பது வருடங்களாக பல முறை வாக்கு கேட்டபோதும் இடித்துக் அம்மன் மறுத்து வருகிறது!
கோயில் கட்டும்போது அதற்கு என்ன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியம். நம் முன்னோர்கள் சுண்ணாம்பு, சுதை வேலைகளுடம் கட்டிய கோயில்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும் நிற்கின்றன. அந்த அந்த கோயில்களுக்கு அந்தந்த பொருட்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என்பது விதி. அதிலும் குறிப்பாக வீரமாத்திகளுக்கு தனி விதிகள் உண்டு. வீரமரணம் அடைந்தோர் கோயில்களுக்கு தனி விதி உண்டு. இன்று அவற்றை சுலபமா இடித்தெரிந்துவிட்டு கட்டும் சிமண்ட் கட்டிடங்கள் ஐம்பது வருடங்களில் பொரிந்து போய்விடுகிறது.
அடுத்து சிலை பின்னம் என்று சொல்லி பழைமையான சிலையை தூக்கி கடலில் வீசவும் செய்கிறார்கள். இங்கே மூலவர் மட்டுமல்ல, கோயில் தூண்கள், சிலைகள் என்று பலவும் தூக்கி வீசச் சொல்லி மக்கள் பயமுருத்தப்படுகிரார்கள். அப்படி வீசப்படும் சிலைகளும் தூண்களும் விரைவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிவிடுகின்றன. உண்மையில் கொங்கதேசத்தில் சிலைகளுக்கு பின்னம் கிடையாது. உதாரணமாக, மோரூர் நல்லபுள்ளியம்மன் கோயில் என்ற சரித்திரப்புகழ் வாய்ந்த சக்திமிகுந்த கோயிலை சொல்லலாம். அங்கே கோயில் நிர்மாணம் செய்தபோது சிலைக்குள் தேரை இருப்பது அறிந்து சிற்பி தட்ட சிலை சிறிது உடைந்து பின்னமாகியது. மக்கள் என்ன செய்வதென்று குழம்பிநிற்க அம்மன் அருள் வந்து இது நல்ல புள்ளிதான் பின்னமெல்லாம் இல்லை என்று வாக்குச் சொல்லியது. கொங்கதேசத்தில் பல சிலைகள் மண்வெட்டி, கடப்பாரை போன்ற ஆயுதங்களால் காயம்பட்டே தெய்வம் என்று கண்டறியப்பட்டன. அவற்றை பின்னம் என்று சொள்ளலாகுமா? சென்னிமலை முருகன் மூலவர் இடுப்புக்கு கீழே சிலை செதுக்கியது முடிவே பெறவில்லை. இதுபோல இன்னும் எண்ணற்ற உதாரணங்கள் சொல்லலாம்.
இதற்கும் கடைசியாக கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டு கோயில்களை சுற்றி அம்மன் (அ) மூலவரின் கண தேவதைகள் பிரதிஷ்டை செய்யப்படும். அந்தகருப்பு சக்திகள் மூலவருக்கு கட்டுப்பட்டவை. அவற்றின் பிரதிஷ்டையும் முக்கியமானது/நுட்பமானது. தவறு ஏற்பட்டால் மிகவும் சிக்கலாகிவிடும். கொங்கதேசத்தில் காடுகள் வெட்டி ஊர்கள கோயில்கள் நிர்மாணம் செய்யப்பட்டபோது, பல பலிகள் கொடுத்தே சக்தியை நிலை நிறுத்தினர். ஏனெனில் வனசக்தியாக இருந்த தேவதை மாற்றம் செய்யும்போது உக்கிரமாகும். இதற்கு ஆதாரமாக சோழன் பூர்வ பட்டயம் என்னும் அரிய வரலாற்று ஆவணம் உண்டு.
இதுபோல, ஸ்தல விருட்சம் என்பது ஒவ்வொரு கோயிலிலும் முக்கியமாகும். முற்காலத்தில் விருட்சமே தெய்வ சக்தியை தாங்கி நின்றன. இன்றளவும், கும்பாபிசேகம் காலம் தவறிவிட்டால், ஸ்தல விருட்சத்தின் அடிமண்ணை எடுத்துவந்தே ஆவாகனம் செய்து கும்பாபிசேகம் செய்வார்கள். ஒரு காணியாளர் வேறு இடத்தில் கோயில் கட்டிக்கொள்ள நினைத்தால் இதுபோல மண் எடுத்துச் சென்றே கட்டுவார். ஸ்தல விருட்சங்கள் மருத்துவசக்தி வாய்ந்தவை. ஆன்ம சக்தி நிறைந்தவை. அவற்றை வெட்டக்கூடாது. சில கிராம கோயில்களில் அருள்வந்து ஆடும் மக்கள் இருந்தாலும் ஸ்தல மரம் வெட்டப்பட்டால் அங்கு யாருக்கும் அருள் வந்து ஆடுவதே நடக்காது என்பது இன்றளவும் நடக்கும் அதிசயமாகும்!
பெரும்பாலான கோயில்களுக்கு குளம், எரி, ஆறு என தீர்த்தங்கள் உண்டு. கோயில்கள் தரிசனம் செய்ய செல்வதை முன்னோர்கள் தீர்த்த யாத்திரை என்றே சொன்னார்கள். தீர்த்தக்கரையில் இருக்கும் கோயில்களுக்கு மிகுந்த சிறப்பான சக்தியுண்டு. இன்றும் நம் காணி சிவன் மற்றும் அம்மன் கோயில்கள் அருகில் நீர்நிலைகள் இருப்பதை காணலாம். தீர்த்தம் மற்றும் விருட்சம் பற்றி இன்னும் ஏராளம் எழுதலாம்.
இதுபோல எண்ணற்ற விஷயங்கள் கோயில் கட்டுமானத்தில் உள்ளன. இன்று சில பணக்காரர்கள் தங்கள் பேரை வெட்டிக்கொள்ளவும், வெளிநாட்டு சக்திகள் தூண்டுதலாலும் (நமது பாரம்பரிய தெய்வ சக்திகளை அழித்து மதம் பரப்ப அவர்களின் தாந்திரீக முறை), சிலை கடத்தும் ஆவலாலும், பழமையான கோயில்களை பழைய கோயில்கள் என்று சொல்லி இடிக்கப்பார்க்கிறார்கள். நம் முன்னோர்கள் கோயில்கள் சிறிது இடிபாடுகள் ஏற்பட்டால் அதை மட்டும் சரி செய்து ஜீரனோத்தாரணம்-புணருத்தாரணம் போன்றவை செய்தார்கள். ஒவ்வொரு முறையும் இடித்துக் கட்டவில்லை. அப்படியே மறுபடி கட்டுவதாக இருந்தாலும் குலகுரு ஆலோசனையின்பேரில் முறைப்படி சரியான போயர்கல் கொண்டு ஆகம சாஸ்திரங்கள் கொண்டு செயவிக்கபடும். அப்படியில்லையேல், அந்தக் காரியத்தை எடுத்து செய்தவர்கள் மட்டுமின்றி அந்த குலத்தையே நாசம் செய்துவிடும். அதை இன்று பல கோயில்களிலும் காண்கிறோம். அதனால்தான் கோயில் காரியத்தில் விளையாட்டோ ஆணவமோ இல்லாமல் செயல்பட வேண்டும் என்று விதி. எவ்வளவு ஏழையாக ஒருவர் இருந்தாலும், பாரம்பரியம் தவறாமல் அந்த குடும்பத்தின் உரிமைகள் கொடுக்கப்படும். அந்த உரிமை-மரியாதைக்குரியவர் தவறு செய்துவிட்டால் மட்டுமே அவரது பங்காளிகளுக்கு அந்த உரிமை கைமாறும். பணதிற்கோ அதிகாரதிற்கோ நம் கொங்குப் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
தற்காலங்களில் தமிழ்முறை என்னும் புதிய சரக்கை விற்க ஒரு கும்பல் வந்துள்ளது. தமிழ் என்னும் அடைமொழியை சேர்த்துக் கொண்டு நம் பாரம்பரிய முறைகளுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள். அவர்கள் லிங்கம்கட்டும் 'கன்னட' (பேர்தான் தமிழ்முறை) வீர சைவ மரபை பின்பற்றுவோர். ஜாதிகள் இல்லை என்போர்; அவர்களுக்கு நம் கோயில்களில் என்ன வேலை? சந்நியாசம் ஏற்றோற கும்பாபிசேக பணிகள் செய்யக்கூடாது என்பது விதி, ஆனால் இவர்கள் சந்நியாசம் ஏற்று கும்பாபிஷேகம் செய்கிறார்கள். பசுவை கோயிலுக்குள் கொண்டுவருவதை வேண்டாம் என்கிறார்கள்! கொங்கதேசம் பின்பற்றுவது ஸ்மார்த்த முறை சனாதன தர்மம். ஆனால் இவர்கள் பின்பற்றுவது வீரசைவம். ஆக அடிப்படையிலேயே இவர்கள் நமக்கேற்றவரல்ல. எனவே பாரம்பரிய முறைகளை பின்பற்றியும், புதிய புதிய முறைகளை கோயில்களில் திணிக்காமலும் குலமும் குடியும் உயர வாழ்வாங்கு வாழ்வோம்.

No comments:

Post a Comment